சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

சேத்தியாத்தோப்பு அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தரக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-12-06 03:30 IST
சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது மிராளூர் கிராமம். இங்கு அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 90-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி கட்டிடம் கட்டப்பட் டது. இந்நிலையில் முறையான பராமரிப்பின்றி இந்த கட்டிடம் பலத்த சேதமடைந்து காணப்பட்டது.

இதையடுத்து பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக 2 வகுப்பறைகளை தவிர மற்ற கட்டிடங்கள் அனைத்தும் கடந்த செப்டம்பர் மாதம் இடிக்கப்பட்டது. ஆனால் புதிதாக கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் 2 வகுப்பறைகளில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதால், இடநெருக்கடி ஏற்படுவதோடு மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், தற்போது பெய்த பலத்த மழையினால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர் வழியாக தண்ணீர் கசிகிறது. இதனால் எந்த நேரமும் கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சமடைகின்றனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர், தலைமையாசிரியர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் நேற்று காலையில் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையில் மிராளூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சேதமடைந்து காணப்படும் கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும், மேலும் ஏற்கனவே இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு பதிலாக புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அரங்கநாதன், புவனகிரி தாசில்தார் உலகளந்தான், சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சேதமடைந்து காணப்படும் இந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வகுப்புகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்