அந்தியூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அந்தியூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2017-12-05 21:30 GMT

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27–ந் தேதி ஒரு பெண் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், நடந்து வந்த பெண் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். உடனே அந்த பெண், ‘திருடன் திருடன்‘ என்று கத்தினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வாகனங்களில் துரத்திச்சென்று கொள்ளையனை கையும், களவுமாக பிடித்து, அந்தியூரில் போலீசில் ஒப்படைத்தார்கள்.

பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த குமாரசாமி (வயது 55) என்பது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நகையை மீட்டு, குமாரசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பவானி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் போலீஸ் விசாரணையில், ஏற்கனவே குமாரசாமி அந்தியூர் மருந்துக்கடை ஒன்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

மேலும் சேலம் மாவட்டம் கொளத்தூரில் ஒரு குற்ற வழக்கும், ஈரோட்டில் ஒரு குற்ற வழக்கும் அவர் மீது இருப்பதும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட குமாரசாமியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் பிரபாகருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த கலெக்டர் பிரபாகர் கொள்ளையன் குமாரசாமியை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து பவானி கிளை சிறையில் இருந்த குமாரசாமி கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்