புஞ்சைபுளியம்பட்டி, கவுந்தப்பாடியில் குடிநீர் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

புஞ்சைபுளியம்பட்டி, கவுந்தப்பாடியில் குடிநீர் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-05 22:15 GMT

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள ஊராட்சி நொச்சிக்குட்டை. இந்த ஊராட்சியில் நொச்சிக்குட்டை, எண்ணாலாம்பாளையம், பொன்மேடு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 880–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இங்குள்ளவர்களுக்கு தொட்டாம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1½ மாதத்துக்கு முன்பு புஞ்சைபுளியம்பட்டி– திருப்பூர் ரோடு விரிவாக்க பணிக்காக குழி தோண்டப்பட்டது. அப்போது நொச்சிக்குட்டை ஊராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக நொச்சிக்குட்டை, எண்ணாலாம்பாளையம், பொன்மேடு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும் இங்குள்ளவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நொச்சிக்குட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு நேற்று காலை 7.30 மணி அளவில் புஞ்சைபுளியம்பட்டி–திருப்பூர் ரோட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் எண்ணாலாம்பாளையம், பொன்மேடு, எம்.ஜி.ஆர். நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் புஞ்சைபுளியம்பட்டி–திருப்பூர் ரோட்டில் அவர்களுடைய கிராமப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 4 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி ரவிச்சந்திரன், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு கடந்த 1½ மாதத்துக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்தோம். மேலும் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் வினியோகம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘4 நாட்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை 9.30 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன்காரணமாக புஞ்சைபுளியம்பட்டி– திருப்பூர் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் கவுந்தப்பாடி அருகே உள்ள கிராமம் கொளத்துப்பாளையம். இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு குட்டிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஒரு வாரமாக இங்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 8 மணி அளவில் அங்குள்ள கவுந்தப்பாடி– பெருந்துறை, பெருந்துறை–கோபி ஆகிய ரோடுகளில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம், பெருந்துறை வட்டார வளர்ச்சி அதிகாரி சிவபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் 9.50 மணி அளவில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்