திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு அஞ்சலி ஊர்வலம்
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு அஞ்சலி ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.;
திருப்பூர்,
தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி ஊர்வலம் நேற்று காலை திருப்பூர் குமரன் சிலை முன் தொடங்கியது. ஊர்வலத்தை மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் சத்யபாமா எம்.பி., குணசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற ஆண்கள் கருப்புச்சட்டை அணிந்தும், பெண்கள் கருப்பு சேலை அணிந்தும் கலந்துகொண்டனர். குமரன் ரோடு, எம்.ஜி.ஆர். சிலை, முனிசிபல் ரோடு வழியாக சென்ற ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்தது. இதற்காக குமரன் ரோட்டின் நடுவில் இரும்பு தடுப்புகள் வரிசையாக அமைக்கப்பட்டு இருந்தன. ஒரு பகுதியில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். மற்றொரு பகுதியில் வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.
ஊர்வலம் மாநகராட்சி அலுவலகம் முன் நிறைவடைந்ததும், அங்கு ஜெயலலிதா உருவபடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்கள் ஆனந்தன், வசந்தாமணி மற்றும் நிர்வாகிகள் கருணாகரன், சிவாச்சலம், யு.எஸ்.பழனிசாமி, சேவூர் வேலுச்சாமி, பல்லடம் நகர துணை செயலாளர் கல்லம்பாளையம் ராமமூர்த்தி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி பொதுச்செயலாளர் கொங்கு ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுபோல் திருப்பூர் மாநகர் முழுவதும் அந்தந்த வார்டுகளில் அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவின் உருவ படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.