ஆரணி ஆற்றில் குளிக்க சென்ற சென்னை கொத்தனார் நீரில் மூழ்கி பலி

பெரியபாளையம் கோவிலுக்கு வந்தபோது ஆற்றில் குளித்த சென்னை கொத்தனார் நீரில் மூழ்கி பலியானார். 3 நாட்களுக்கு பின் அவரது உடல் கரை ஒதுங்கியது.;

Update: 2017-12-05 23:15 GMT

பெரியபாளையம்,

சென்னை பேரக்ஸ் ரோட்டில் வசித்து வந்தவர் பத்மநாபன் (வயது 42), கொத்தனார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஹேமாவதி (18), புவனேஸ்வரி (16) ஆகிய மகள்கள் உள்ளனர்.

பத்மநாபன் தனது குடும்பத்துடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வந்தார். கோவில் அருகே அறை எடுத்து தங்கினர். கோவிலில் அன்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

மது குடிக்கும் பழக்கம் உள்ள பத்மநாபன் அன்று மாலை மனைவியிடம் குடிக்க பணம் கேட்டதாகவும், லட்சுமி பணம் தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற பத்மநாபன் பின்னர் அறைக்கு திரும்பவில்லை.

இதனால் தனது கணவர் சென்னை சென்றிருப்பார் என்று எண்ணி லட்சுமி தனது மகள்களுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், பத்மநாபன் அங்கும் வரவில்லை என்பது தெரிந்தது. முன்பு ஏற்கனவே ஒரு முறை திருப்பதிக்கு சென்றபோது பத்மநாபன் மனைவியிடம் கோபித்துக் கொண்டு சென்றவர் 3 நாட்கள் கழித்து திரும்பிவந்தார். அதேபோல் வந்துவிடுவார் என்று லட்சுமி எண்ணியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பெரியபாளையம் கோவில் அருகே உள்ள ஆரணி ஆற்றில் ஒரு உடல் கரை ஒதுங்கியிருப்பதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்து விசாரித்தபோது அது காணாமல்போன பத்மநாபன் என்பது தெரியவந்தது. போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்