கோவை– பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் இரட்டை அடுக்கு ரெயில் 2–வது முறையாக சோதனை ஓட்டம்

கோவை–பெங்களூரு இடையே இயக்கப்படும் உதய் எக்ஸ்பிரஸ் இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டம் 2–வது முறையாக நடைபெற்றது.

Update: 2017-12-05 22:15 GMT

கோவை,

கோவை– பெங்களூரு இடையே நேரடி ரெயில் இயக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதை ஏற்று கோவை–பெங்களூரு இடையே உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இரட்டை அடுக்கு பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் கோவை–பெங்களூரு வழித்தடத்தில் உதய் எக்ஸ்பிரஸ் இரட்டை அடுக்கு ரெயிலை இயக்கி முதல்–முறையாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த ரெயிலில், 2 இரட்டை அடுக்கு பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தன. அதில் இரட்டை அடுக்கு பெட்டிகள் உயரமாக இருப்பதால் ரெயில் நிலையத்துக்குள் நுழையும் போதும், பாலங்களில் வரும் போது பாதிப்பு ஏதும் ஏற்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதில் கண்டறியப்பட்ட குறைகள் கடந்த 2 மாதங்களில் சரி செய்யப்பட்டன.

இதையடுத்து நேற்று 2–வது முறையாக கோவை–பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து இரட்டைஅடுக்கு பெட்டிகளுடன் ரெயில் கோவைக்கு நேற்று காலை 10.45 மணி அளவில் வந்தது. இதில் 10 இரட்டை அடுக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இதில் 2 பெட்டிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

உதய் எக்ஸ்பிரஸ் இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டமாக நேற்று மதியம் 12.20 மணி அளவில் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் ரெயில்வே என்ஜினீயர்கள் காமராஜ், விவேக்சர்மா உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள் பயணம் செய்தனர்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:–

கோவை–பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 11.8.17 அன்று முதல்– முறையாக நடத்தப்பட்டது. அப்போது கண்டறியப்பட்ட குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு தற்போது 2–வது முறையாக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. இதில் இணைக்கப்பட்டு உள்ள இரட்டை அடுக்கு ரெயில் பெட்டிகள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவை. இதில் ஒரு பெட்டியில் உள்ள 2 அடுக்கிலும் சேர்த்து 120 இருக்கைகள் உள்ளன. தற்போது சென்னை– பெங்களுரூ இடையே இரட்டை அடுக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

எனவே கோவையில் இருந்து தொடங்கி திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இரட்டை அடுக்கு ரெயில் சோதனை ஓட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சோமநாயக்கன்பட்டி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவைக்கு வந்து விடும். சோதனை ஓட்ட ரெயில் பெட்டிகளின் இருபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

கடந்த முறை இரட்டை அடுக்கு பெட்டிகளில் எவ்வித எடையும் ஏற்றப்படாமல் இயக்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளை கணக்கில் கொண்டு 16 டன் அளவுக்கு தண்ணீர் கேன்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதன்பிறகு இந்த வழித்தடத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கண்காணிக்க 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் நிறைவு பெற்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படும்.

சாதாரண ரெயில் பெட்டியின் உயரம் 4.25 மீட்டர், நீளம் 22.25 மீட்டர். ஆனால் இரட்டை அடுக்கு ரெயில் பெட்டியின் உயரம் 4.36 மீட்டர், நீளம் 23.54 மீட்டர். அகலத்தில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த சோதனை ஓட்டத்தின் போது ரெயில் பாதையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் அவை செய்யப்படும். இரட்டை அடுக்கு ரெயில் பெட்டியை இயக்குவதில் எந்த சிரமங்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு கோவை–பெங்களூரு மார்க்கத்தில் இரட்டை அடுக்கு பெட்டிகளுடன் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். இதை பகல்நேர ரெயிலாக இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்