நிலத்தகராறில் பயங்கரம்: மூதாட்டி சரமாரி வெட்டிக்கொலை 2 பேருக்கு அரிவாள் வெட்டு; தந்தை-மகன் கைது

கொல்லிமலையில் நிலத்தகராறில் மூதாட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக அவர்களது உறவினர்களான தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-05 23:15 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஊராட்சியில் உள்ள தேவானூர்நாடு மேட்டுவிளாரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லபிடாரன் (வயது 80). இவருக்கும், இவருடைய தம்பி வெள்ளையனுக்கும் (75) இடையே நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லபிடாரன் தனது விவசாய நிலத்தில் சரிந்து போன கட்டுக்கல் சுவரை பிரித்து மீண்டும் கட்டினார்.

இதை அறிந்த வெள்ளையனின் மகன் பொன்னுசாமி (46) அங்கு வந்து தகராறு செய்துள்ளார். அப்போது அவர் தனது நிலத்துடன் சேர்ந்து கட்டுக்கல் சுவர் கட்டிய பெரியப்பா செல்லபிடாரன் குடும்பத்தினரை சும்மா விடமாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை செல்லபிடாரனின் மகன் துரைசாமி தனது குழந்தையுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கையில் அரிவாளுடன் பொன்னுசாமி ஓடி வந்தார். இதை பார்த்தவுடன் குழந்தையுடன் துரைசாமி தப்பி ஓடி வந்து வீட்டிற்குள் புகுந்து கொண்டார்.

வீட்டில் இருந்த துரைசாமியின் தாயார் வெள்ளையம்மாள் (70) பொன்னுசாமியை தடுத்துள்ளார். ஆனால், ஆத்திரம் கொண்ட அவர் வெள்ளையம்மாளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

அந்த நேரத்தில் வெளியே சென்று விட்டு செல்லபிடாரனும், அவரது பேரன் சரவணனும் (21) வீட்டுக்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் பொன்னுசாமி ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினார். இதில் வெட்டுக்காயம் அடைந்த அவர்கள் அந்த இடத்திலேயே சாய்ந்து விழுந்தனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

உடனே, வெட்டுக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கொல்லிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள், கொலை செய்யப்பட்டு கிடந்த வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பொன்னுசாமியை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவருடைய தந்தை வெள்ளையனும் கைது செய்யப்பட்டார். 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்து தகராறில் மூதாட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கொல்லிமலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்