அடுத்தடுத்த கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

பென்னாகரத்தில் அடுத்தடுத்த கடைகளின் பூட்டுகளை உடைத்து மர்ம ஆசாமிகள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2017-12-05 22:45 GMT
பென்னாகரம்,

பென்னாகரம் முள்ளுவாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடைக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கடைக் குள் சென்று பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.12 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இவருடைய கடைக்கு அருகில் உள்ள அருள் என்பவருடைய செல்போன் சிம்கார்டு விற்பனை செய்யும் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அங்குள்ள 2 ஐஸ் கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு கதவு மற்றும் ஷட்டர்கள் திறந்து இருந்தது. இதுகுறித்து முருகேசன் கடைக்காரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அருள் உள்ளிட்ட 3 கடைக்காரர்களும் விரைந்து வந்தனர். அப்போது கடைகளில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடப்பாரையால் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து மர்ம ஆசாமிகள் விட்டு சென்ற கடப்பாரையை போலீசார் கைப்பற்றினர். மேலும் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர். 3 கடைகளிலும் கொள்ளை போன பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்