முன்னாள் கவுன்சிலரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் சாலை மறியல்
முன்னாள் கவுன்சிலரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பந்தலூரில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பழைய நெல்லியாளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 54). இவர் நெல்லியாளம் நகராட்சியின் 1–ம் வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந் தேதி டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகி ராமானுஜம் என்பவரின் வாகனத்தில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. இதைக்கண்ட விஜயன் அந்த கொடியை வாகனத்தில் இருந்து அகற்றினார்.
அதன் பின்னர் விஜயன் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது உப்பட்டி பஜாரில் நடந்த சென்ற விஜயனை 5 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றது. மேலும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் தேவாலா போலீஸ் நிலையம் அருகே விஜயனை காரில் இருந்து இறக்கி விட்டு தப்பி விட்டது. மர்ம கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த அவர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து தேவாலா போலீசில் விஜயன் புகார் செய்தார். இதனிடையே முன்னாள் கவுன்சிலர் விஜயன் தாக்கியதாக டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகி ராமானுஜத்தின் ஆதரவாளர் நசுரூதின் என்பவர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இது குறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் கவுன்சிலர் விஜயனை கடத்தி சென்று தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேலிடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று புகார் அளித்தனர்.
ஆனால் விசாரணை நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பந்தலூர் பஜாரில் உள்ள நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில விவசாய அணி துணை செயலாளர் பாரதியார், முன்னாள் நகர செயலாளர் டி.எல்.எஸ். ராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பொன்.ஜெயசீலன், கூடலூர் நகர இளைஞரணி செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர செயலாளர் ராஜா தங்கவேல் உள்ளிட்ட கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
பின்னர் பந்தலூர்–கோழிக்கோடு சாலையில் அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்னாள் கவுன்சிலரை கடத்தி தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் துணை சூப்பிரண்டு உறுதி அளித்தார். இதையொட்டி 1 மணி நேரத்துக்கு பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து தேவாலா போலீசார் வழக்கு பதிவு செய்து முன்னாள் கவுன்சிலர் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் பந்தலூரை சேர்ந்த நசுரூதின் (வயது 44), ஷாபீர், சுபைது, முஜீப், ஆசீப் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் நசுரூதின் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் கவுன்சிலர் விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.