கொலக்கம்பை, பந்தலூர் பகுதிகளில் ஆதிவாசி கிராமங்களில் போலீசார் ரோந்து

கொலக்கம்பை, பந்தலூர் பகுதிகளில் ஆதிவாசி கிராமங்களில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.;

Update: 2017-12-05 22:30 GMT

கொலக்கம்பை,

கொலக்கம்பை அருகே நெடுகல்கம்பை ஆதிவாசி கிராமத்தில் கடந்த ஆண்டு பெண்கள் உள்பட 5 மாவோயிஸ்டுகள் புகுந்து கிராம மக்களிடம் உணவு பொருட்களை வாங்கி கொண்டு, கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் நோட்டீஸ் ஓட்டி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.

மேலும் தமிழக–கேரள எல்லை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதால் மாவட்ட போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலக்கம்பை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகேசவன் தலைமையில் போலீசார் கொலக்கம்பை அருகே உள்ள ஆதிவாசி கிராமங்களான முப்பர்காடு, ஊஞ்சலார் கம்பை, நீராடி பள்ளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று அப்பகுதியில் பொதுமக்களிடம் மாவோயிஸ்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

இதே போன்று பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை அருகே விலங்கூர், குனிமூலா, பெண்ணை உள்பட பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஏட்டு வசந்த் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு சென்று அங்கு வசித்து வரும் மக்களை சந்தித்தனர். ஆதிவாசி மக்களிடம், வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என கேட்டறிந்தனர். அவ்வாறு தகவல் எதுவும் கிடைத்தால் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் செய்திகள்