கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை முயற்சி காப்பாற்றுவதற்காக தாயும் குதித்ததால் பரபரப்பு

கொடைரோடு அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள். காப்பாற்றுவதற்காக தாயும் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-05 22:30 GMT

கொடைரோடு,

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி சிறுமலை அடிவாரம் கிழக்கு தோட்டத்து குடியிருப்பை சேர்ந்தவர் சடையாண்டி. விவசாயி. அவருடைய மனைவி முருகேஷ்வரி (வயது 38). இவர்களது மகள் மீனாட்சி (13). இவள், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறாள்.

பக்கத்து வீட்டுக்கு மீனாட்சி அடிக்கடி சென்று வருவாள். இந்தநிலையில் அந்த வீட்டில் இருந்த ‘மெமரி கார்டு‘ காணாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மீனாட்சியிடம் பக்கத்து வீட்டுக்காரர் விசாரித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த முருகேஷ்வரி, மீனாட்சியிடம் பக்கத்து வீட்டுக்கு இனிமேல் செல்லக்கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த மீனாட்சி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாள். இதற்காக, தனது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் அவள் குதித்து விட்டாள். இதனைக்கண்ட முருகேஷ்வரியும் தனது மகளை காப்பாற்றும் நோக்கத்தில் கிணற்றுக்குள் குதித்து விட்டார்.

100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் கிடையாது. செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதற்கிடையே கிணற்றுக்குள் குதித்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் கிடந்தபடி அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று தாய், மகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி, கயிறு கட்டி 2 பேரையும் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

படுகாயம் அடைந்த 2 பேரும் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்