கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சட்டம்–ஒழுங்கு சரியில்லை என கூறி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டம்

கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சட்டம்–ஒழுங்கு சரியில்லை என கூறி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக மந்திரி எச்.எம்.ரேவண்ணா கூறினார்.;

Update: 2017-12-05 21:00 GMT

கோலார் தங்கவயல்,

கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சட்டம்–ஒழுங்கு சரியில்லை என கூறி கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக மந்திரி எச்.எம்.ரேவண்ணா கூறினார்.

மந்திரி ஆய்வு

கர்நாடக மாநில போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா நேற்று கோலாருக்கு வந்தார். அவர், கோலார் அரசு பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கோலார் மாவட்ட கர்நாடக போக்குவரத்து கழக ஆய்வாளர் பிரகாஷ் பாபு இருந்தார்.

இதையடுத்து எச்.எம்.ரேவண்ணா கோலார் அரசு விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

துப்பாக்கி சூடு நடக்க வேண்டும்

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் அரசின் நல்லாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பா.ஜனதாவினர் மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க திட்டமிட்டு வருகிறார்கள். இது சமீபத்திய சம்பவம் மூலம் அம்பலமாகி உள்ளது. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பிரதாப் சிம்ஹா எம்.பி.யிடம் காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கலவரத்தை தூண்டும் வகையில் போராட்டம் நடத்த அறிவுறுத்தி உள்ளார்.

அதனை பிரதாப் சிம்ஹா எம்.பி.யே கூறியுள்ளார். உன்சூரில் பிரதாப் சிம்ஹா எம்.பி. போலீசாரை மதிக்காமல் காரை எடுத்துக் கொண்டு, தடுப்பு வேலிகளை தள்ளி சென்றுள்ளார். அன்றைய தினத்தில் உன்சூரில் போலீசாரை தூண்டிவிட்டு துப்பாக்கி சூடு நடக்க வைக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்துள்ளது.

நியாயம் மறுக்கப்படும்

இதுபோன்று மாநிலத்தில் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சட்டம்–ஒழுங்கு சரியில்லை என கூறி அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அன்று நடந்த சம்பவத்தில் போலீஸ்காரர்கள் நேர்மையாகவும், அமைதியாகவும் நடந்து கொண்டதால், பா.ஜனதாவினர் திட்டமிட்டது நடக்கவில்லை.

மாநிலத்தில் இருபிரிவினர் இடையே மோதல் உருவாக மாநில அரசு ஒருபோதும் அனுமதிக்காது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், இருபிரிவினர் இடையே மோதல் அதிகரிக்கும். ஒரு தரப்பினருக்கு நியாயம் மறுக்கப்படும். மாநிலத்தில் யார் வன்முறை அரசியல் செய்கிறார்கள் என்று மக்களுக்கு தெளிவாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்