மணல் குவாரி; தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது 8–ந்தேதி இறுதி விசாரணை

‘மணல் குவாரிகளை மூட வேண்டும்‘ என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரிய தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணையை வருகிற 8–ந்தேதிக்கு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-12-05 23:00 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ராமையா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.ஆர்.எம்.ராமையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இறக்குமதி செய்த மணலை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்றும் கடந்த 29–ந்தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், ‘சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியைத் தவிர மணல் குவாரிகள், கிரானைட் குவாரிகள் உள்ளிட்ட பிற கனிம குவாரிகளையும் மூட வேண்டும், வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு தேவையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்‘ என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மனுதாரர் (ராமையா), மத்திய அரசின் இறக்குமதி கொள்கை அடிப்படையில் மணல் இறக்குமதி செய்துள்ளதாக கூறியிருக்கிறார். தமிழக அரசின் கனிமவள சட்டப்படி மனுதாரர் இறக்குமதி செய்துள்ள மணல், தொழிற்சாலை பயன்பாட்டிற்கான மணல் (தாது மணல்) என்ற வரையறைக்குள் வருகிறது. அத்தகைய தாது மணல் இறக்குமதி செய்வதற்கான லைசென்சு, விற்பனைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து அனுமதிச் சீட்டு ஆகியவற்றை உரிய அதிகாரிகளிடம் மனுதாரர் பெறவில்லை. எனவே தான் மணலை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இவற்றை கருத்தில் கொள்ளாத தனி நீதிபதி, பொதுநல வழக்குகளை போல இந்த வழக்கையும் கையாண்டுள்ளார். வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் முறையான வாதங்களை முன்வைக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் ஆஜராகி வாதாடியதாவது:–

“மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் இறக்குமதி மணலை வினியோகிக்க உரிமம் பெற்றுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் மாநில அரசிடம் மணலை இருப்பு வைக்க லைசென்சு வாங்குவதும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெறுவதும் அவசியம். மேலும் மணலை ஏற்றிச்செல்லும் வாகனங்களை சோதனை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது.

மணல் குவாரிகளை மூடுவதால் தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். சாலை, மேம்பாலம் அமைத்தல், அணைகள் கட்டுதல் போன்ற கட்டுமானப்பணிகள் பாதிக்கப்படும். மலேசிய மணலில் சிலிக்கான் அளவு அதிகமாக இருப்பதால் கட்டுமானத்துக்கு பயனற்றதாக இருக்கும்.

இந்த வழக்கை பொறுத்தமட்டில் சம்பந்தமில்லாத மத்திய அரசின் சுரங்கத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வணிகம் மற்றும் தொழில்துறை, நிதித்துறை ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் போதுமான விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு வாய்ப்பு கொடுக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.“ இவ்வாறு அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

ஆனால் இடைக்கால தடை பற்றி உத்தரவு எதுவும் பிறப்பிக்காத நீதிபதிகள், ‘இறுதி விசாரணைக்காக வருகிற 8–ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

மேலும் செய்திகள்