அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆனதையொட்டி மதுரை மாநகர அ.தி.மு.க. சார்பில் அமைதி பேரணி நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் என ஏராளமானோர் கருப்பு சட்டையுடன் பங்கேற்ற பேரணியானது, தெற்குமாசி வீதியில் தொடங்கி மேலமாசி வீதி வழியாக வடக்குமாசி வீதியில் சென்று நிறைவடைந்தது. பேரணி முடிவில் சர்வமத பிரார்த்தனை நடந்தது. இதன்பின்பு அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
அ.தி.மு.க. அரசை எப்போதும் குறை கூறுவதை மு.க.ஸ்டாலின் வழக்கமாக கொண்டுள்ளார். குமரி மாவட்டத்தில் புயல், மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை முதல்–அமைச்சர் அனுப்பி வைத்தார். தமிழக துணை முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து, சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டனர். சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்க அரசு அதிகாரிகளால் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி உறுதியாகிவிட்டது. அங்குள்ள மக்களை நாங்கள் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டு அறிகிறோம்.
ஆனால் டி.டி.வி. தினகரன் அப்படி இல்லை. அவர் மாடியிலிருந்து மக்களை சந்திப்பவர். தமிழக முதல்–அமைச்சர் மற்றும் அனைத்துத்துறை அமைச்சர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். நாங்கள் என்றுமே மக்களோடு மக்களாக இருப்பவர்கள். ஜெயலலிதா உயிரிழந்து ஓராண்டு ஆகிவிட்டது. அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
இன்று தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் அன்று தி.மு.க.வை விமர்சித்தன. இது அனைவருக்கும் தெரியும். நடிகர் விஷால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். எங்களை எதிர்க்கக்கூடிய வல்லமை தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. எங்களை தி.மு.க.வால் வீழ்த்த முடியாது. தாயில்லா பிள்ளைகளாக உள்ள எங்களை பலர் வீழ்த்த பார்க்கிறார்கள். அது யாராலும் முடியாது. யார் எந்த பக்கம் இருந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கள் வேட்பாளர் மதுசூதனன் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.