சாத்தூர் அருகே தண்டவாளத்தில் கற்கள் ரெயிலை கவிழ்க்க சதியா?

சாத்தூர் அருகே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன்மூலம் ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-05 22:15 GMT

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர்– கோவில்பட்டி ரெயில்பாதையில் வைப்பாற்றில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் இரவு கற்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த வழியாக புனலூர்–மதுரை பயணிகள் ரெயிலும் சென்னை–திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடந்து சென்றன. அப்போது கற்கள் மீது ரெயில்கள் சென்றதை தொடர்ந்து லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி மற்றும் சாத்தூர் ரெயில்நிலைய அதிகாரிகளுக்கு என்ஜின் டிரைவர்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகளும் ரெயில்வே போலீசாரும் அங்கு விரைந்தனர்.

அங்கு சென்று பார்த்தபோது தண்டவாளத்தில் பெரிய கற்கள் நொறுங்கி கிடந்தன. அவற்றை அப்புறப்படுத்தினார்கள்.

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனும் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் மாதம் 6–ந் தேதியை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ரெயில் பாதைகளிலும் தீவிர கண்காணிப்பும் நடைபெறும்.

இந்த நிலையில் தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததால் ரெயிலை கவிழ்க்க சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்