பெரம்பலூரில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: அ.தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம்

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி ஊர்வலம் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

Update: 2017-12-05 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மேற்குவானொலித்திடலில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்திலிருந்து அமைதி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலம் பழைய பஸ்நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டை, பாலக்கரை வழியாக புதிய பஸ்நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்தும், அனைத்து தொண்டர்களும் தங்களது சட்டைகளில் கறுப்பு பட்டை அணிந்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதிய பஸ்நிலையத்தில் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவபடத்திற்கும், ஜெயலலிதாவின் சிலைக்கும் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.வுமான அரணாரை ராமச்சந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் மருதராஜா எம்.பி., நகர செயலாளர் ராஜபூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் நகர அ.தி.மு.க. சார்பில் ரோவர் நூற்றாண்டு வளைவு அருகே மேடை அமைக்கப்பட்டு அதில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு வண்ணமலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் நகர கழக செயலாளர் ராஜபூபதி தலைமையில், நகர கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பெரம்பலூர் நகரின் பிரதான சாலைகளில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முக்கிய இடங்களில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. 

மேலும் செய்திகள்