முதல்–அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலத்தை தனி தாலுகாவாக உருவாக்க பணிகள் தீவிரம்

முதல்–அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலத்தை தனி தாலுகாவாக உருவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Update: 2017-12-05 21:15 GMT

தொண்டி,

ராமநாதபுரத்தில் கடந்த மாதம் 25–ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். அப்போது ஆர்.எஸ்.மங்கலத்தை தலைமையிடமாகக்கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில் திருவாடானை தாலுகாவில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆர்.எஸ்.மங்கலத்தை தனி தாலுகாவாக உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர், ஆனந்தூர் ஆகிய 3 வருவாய் உள்வட்டங்களை பிரித்து ஆர்.எஸ்.மங்கலம் தனி வட்டம் உருவாக்கப்படுகிறது. இதில் இந்த உள்வட்டங்களை 34 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கும். மேலும் பரமக்குடி தாலுகாவை சேர்ந்த ஆட்டாங்குடி, அரியான்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்கள் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதால் இந்த 2 வருவாய் கிராமங்களையும் பரமக்குடி தாலுகாவில் இருந்து பிரித்து ஆர்.எஸ்..மங்கலம் தாலுகாவில் இணைக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 36 வருவாய் கிராமங்களை கொண்ட தனி தாலுகாவாக ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து உரிய ஆவணங்களுடன் கூடிய திட்ட அறிக்கைகள் ஓரிரு நாட்களில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஒப்புதலுடன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், இந்த திட்ட அறிக்கை மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்