கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி மந்திரி ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி ராமலிங்கரெட்டி குற்றம்சாட்டினார்.

Update: 2017-12-04 23:24 GMT

பெங்களூரு,

போலீசார் அனுமதிக்கவில்லை  பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கர்நாடக போலீஸ் மந்திரி சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் கர்நாடகத்தில் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக மந்திரி ராமலிங்கரெட்டி குற்றம்சாட்டினார்.

பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கர்நாடக போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி நேற்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மைசூரு மாவட்டம் உன்சூரில் அனுமன் ஜெயந்தி விழாவுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். எந்தெந்த சாலையில் ஊர்வலம் செல்ல வேண்டும் என்று போலீசார் முன்கூட்டியே தெரிவித்தனர். ஆனால் சிலர் போலீசார் கூறிய சாலைகளில் ஊர்வலம் செல்லாமல், தடையை மீறி வேறு சாலையில் செல்ல முயற்சி செய்தனர். அதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. போலீசார் தடுத்து நிறுத்தியும் கேட்காமல், தடுப்பு மீது காரை ஏற்றிவிட்டு அதனை ஓட்டிச் சென்று அத்துமீறல் செய்துள்ளார். எம்.பி.யாக இருக்கும் அவருக்கு சட்டம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்தும் சட்டத்தை மீறுவது நியாயமா?. போலீசார் அவரை கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை போலீசார் கைது செய்வது வழக்கம். போலீசார் மீது பிரதாப் சிம்ஹா எம்.பி. குறை கூறுவது சரியல்ல. போலீசார் தங்களின் கடமையை செய்கிறார்கள். சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அவர்களின் கடமை. போலீசாரின் பணியில் குறுக்கிடுவது கண்டிக்கத்தக்கது ஆகும்.

பிரதாப் சிம்ஹா எம்.பி.யின் அத்துமீறலை கண்டிக்காமல், முழு அடைப்பு நடத்துவதாக எடியூரப்பா கூறுகிறார். முதல்–மந்திரியாக இருந்த அவருக்கு சட்டம் தெரியவில்லையா?. மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவும் அவ்வாறே பேசுகிறார். பா.ஜனதாவினருக்கு சட்ட பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் சட்டத்தை மதித்து நடப்பார்கள். பிரதாப் சிம்ஹா எம்.பி. அடிக்கடி சட்டத்தை மீறுகிறார். சட்டம் அனைவருக்கும் சமமானது.

அதனால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராமர்கோவில் கட்டுவதாக பா.ஜனதாவினர் கூறி வருகிறார்கள். இப்போது மத்தியிலும், உத்தரபிரதேசத்திலும் பா.ஜனதா ஆட்சி தான் உள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்காக கர்நாடகத்தில் இருந்து செங்கல் சேகரித்து அனுப்பினர். ராமர்கோவில் கட்டுவது தானே. இன்னும் 40 ஆண்டுகள் ஆனாலும் ராமர்கோவிலை கட்ட மாட்டார்கள். அந்த விவகாரத்தை உயிருடன் வைத்து அரசியல் செய்து கொண்டு, மக்களின் ஓட்டுகளை பெறுவது தான் பா.ஜனதா கட்சியின் நோக்கம்.

சிக்கமகளூருவில் தத்தா குகை கோவில் விழாவில் லேசான கலாட்டா சம்பவம் நடந்தது. அதை பெரிதாக்க பா.ஜனதாவினர் முயற்சி செய்தனர். போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், பா.ஜனதா அரசியல் உள்நோக்கத்துடன் சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்கிறது. அதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

துமகூருவில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 ஆயிரத்து 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,650 சப்–இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 11 ஆயிரம் காவலர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டனர்.

அடிமட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்காக 11 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 2 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு உள்ளது. குற்ற சம்பவங்கள் நிகழ்வில் நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகம் 10–வது இடத்தில் இருக்கிறது. பெங்களூருவில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

குற்ற சம்பவங்களின் பட்டியலில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதனால் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக சொல்கிறார்கள். போக்குவரத்து விதிமீறல்களை தவிர்த்து பார்த்தால் பெங்களூருவில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக தான் உள்ளது.

இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்