ரூ.8 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்துக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2017-12-04 23:00 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவில் உள்ள ஒரு குடோனுக்கு பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.

அப்போது பெங்களூருவில் இருந்து ஒரு லாரியில் கடத்தி வந்த புகையிலை பொருட்களை காஞ்சீபுரம் பி.எஸ்.கே.தெருவில் உள்ள ஒரு குடோனில் இறக்க முயன்றனர்.

உடனடியாக இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து அதில் கடத்தி வரப்பட்ட சுமார் 1¾ டன் எடையுள்ள 123 பண்டல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் இந்த புகையிலை பொருட்களை காஞ்சீபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காஞ்சீபுரம் பி.எஸ்.கே. தெருவைச் சேர்ந்த அசாராம் (வயது 27), அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஷ் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வர பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்