சம்பளம் வழங்காததை கண்டித்து புதுவை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

சம்பளம் வழங்காததை கண்டித்து புதுவை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-04 21:00 GMT

புதுச்சேரி,

புதுவை நகராட்சியில் 350க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத இறுதி நாளான்று சம்பளம் வழங்கப்படும். ஆனால் நவம்பர் மாத சம்பளம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இது குறித்து அவர்கள் நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது உடனடியாக சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் புதுவை நகராட்சி கூட்டமைப்பு ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் துணை தலைவர் இருசப்பன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் செயலாளர் பத்ரிஷ், தலைவர் விநாயகவேல், நிர்வாகிகள் அய்யப்பன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக நகராட்சி ஆணையர் அலுவலகத்தின் உள்ளே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த உடனே ஒதியஞ்சாலை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் காரணமாக நேற்று புதுவை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரிவசூல், அலுவலக பணிகள் மற்றும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்