தேங்கி இருந்த நீரில் மூழ்கி சிறுவன் பலி உரிமையாளர் கைது

புதிய கட்டிடம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி சிறுவன் பலி உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-12-04 23:30 GMT
கோயம்பேடு,

சென்னை நெற்குன்றம் செல்லதுரை நாடார் நகரில் வசிப்பவர் சுதாகர் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பவானி (29). இவர்களது மகன் லக்‌ஷன்குமார் (4). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான்.

நேற்று மாலை, அதே பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே லக்‌ஷன்குமார் விளையாடிக் கொண்டிருந்தான். அந்த பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அப்போது, அந்த பள்ளத்தில் தேங்கிய நீரில் அவன் எதிர்பாராதவிதமாக விழுந்தான். இதனால் லக்‌ஷன்குமார் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பலியானான்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டிட உரிமையாளர் சக்கரபாணி என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்