குடிபோதையில் தகராறு செய்த தந்தை வெட்டிக்கொலை மகன் கைது

குரோம்பேட்டையில் குடிபோதையில் தகராறு செய்த தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-12-04 23:30 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 55). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சதீஸ் (24). இவர் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் தோல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

ராஜா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிபோதையில் வந்த ராஜா தனது மகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சதீஸை கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த கத்தியை பறித்து, தந்தை ராஜாவின் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். நேற்று காலை வீட்டில் பின்பகுதியில் ரத்த வெள்ளத்தில் ராஜா பிணமாக கிடப்பதை பார்த்த பொதுமக்கள் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக சதீஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்