தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை வழங்க வேண்டும்; ஜி.கே.மணி

தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை வழங்க வேண்டும் என்று திருப்பூரில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2017-12-04 22:00 GMT

திருப்பூர்,

பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் திருப்பூர்–அவினாசி ரோடு அம்மாபாளையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை பொதுச்செயலாளர் வடிவேல்கவுண்டர் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலைவகித்தார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கட்சியில் இணைந்த புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, பிற கட்சிகளில் இருந்து பா.ம.க.வில் இணையும் எழுச்சி மாநாட்டை கோவையில் நடத்துவது, திருப்பூர் பழைய பஸ்நிலையம் மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருப்பூர் மாநகரில் அதிக அளவில் விபத்து ஏற்பட காரணமாக உள்ள குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சரிசெய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பா.ம.க. துணைத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன்.நடராஜ், காளியப்பன், மாவட்ட செயலாளர்கள் குமார், ராஜேந்திரன், நகர செயலாளர் கண்ணன், மணிகண்ணன், நகர தலைவர் சிவமணி, அவினாசி நகர செயலாளர் தமிழ்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள சிறு, குறு தொழில்கள் முடங்கி உள்ளன. தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை, தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே தமிழகத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை வழங்கவேண்டும். மேலும் அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொங்கு மண்டல மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், வறட்சி ஏற்படாமல் தடுக்கவும், மழைநீரை சேமித்து பாதுகாக்க தமிழக அரசு முறையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மேலும் பரம்பிகுளம்–ஆழியாறு, உப்பாறு, கீழ்பவானி, கிருஷ்ணகிரி உள்பட 20–க்கும் மேற்பட்ட பாசன திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல லட்சம் தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் பாதாள சாக்கடை திட்டத்தையும், மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.மணி கூறினார்.

மேலும் அவரிடம், ஆர்.கே.நகர் தொகுதியில் நடிகர் விஷால் போட்டியிடுவது குறித்து நிருபர்கள் கேட்ட போது, ‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்‘ என்றார்.

மேலும் செய்திகள்