தமிழக திரைப்படத்துறை வட்டிக்கு பணம் வாங்கி தான் படம் தயாரிக்கும் நிலை உள்ளது; சீமான்
வட்டிக்கு பணம் வாங்கி தான் படம் தயாரிக்கும் நிலையில் தமிழக திரைப்படத்துறை உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் கூறினார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கன்னியாகுமரி மாவட்டம் ஒகி புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மழையால் துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது. புயல் குறித்த தகவல் கிடைத்தும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.
நடிகர் விஷால், நடிகர் சங்க தலைவராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் அடுத்தடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலை போன்றே அரசியல் தேர்தலையும் அவர் நினைத்துக்கொண்டார். இதன் காரணமாக தற்போது ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் தேர்தல் களத்துக்கு வரட்டும் அப்போது பார்க்கலாம்.
வட்டிக்கு பணம் வாங்கி தான் படம் தயாரிக்கும் நிலையில் தற்போது தமிழக திரைப்படத்துறை உள்ளது. மேலும் படம் தயாரிக்க வங்கிகளில் கடன் கொடுக்கப்படுவதும் இல்லை. தற்போது அன்பு செழியன் இல்லை என்றால் வேறு நபர்கள் இதை செய்யப்போகிறார்கள். எனவே இந்த பிரச்சினையில் அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.