பாலாற்றில் மணல்குவாரி திறக்கவேண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

நவ்லாக் கிராமத்தின் அருகே பாலாற்றில் மணல்குவாரி திறக்கவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

Update: 2017-12-04 22:00 GMT

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் உலக சிக்கனநாளை முன்னிட்டு நடந்த போட்டிகளிலும் மற்றும் அகிலஇந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ– மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆற்காடு பகுதியை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், ‘‘வில் வாலாஜா சாத்தப்பாக்கம் மணல்குவாரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்று மணல் எடுத்து தொழில்செய்துவந்தோம். ஆனால் வாலாஜா தாசில்தார் ஆன்லைன் மூலம் பணம் கட்டும் முறை இருப்பதால் அதன் மூலம் பணம் செலுத்தியபின்னரே மணல் அள்ள அனுமதிக்கவேண்டும் என்கிறார். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆன்லைனில் பணம் செலுத்தியதற்கு ரசீது கொடுப்பதில்லை. இதனால் நாங்கள் தொழில்செய்ய முடிவதில்லை. எனவே நாங்கள் மணல் அள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நவ்லாக் கிராமத்தின் அருகே பாலாற்றில் மணல் குவாரி திறக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

கிராம அறிவியல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கொடுத்துள்ள மனுவில் ‘‘கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நீர்நிலைகளை பாதுகாப்பதுபோன்று நமது மாவட்டத்தில் விவசாயத்தை பாதுகாக்கவும், குடிநீர் பஞ்சத்தை தீர்க்கவும் பாலாற்றின் அகலத்தை அளந்து இருகரைகளிலும் எல்லைக்கல் நட்டு பாலாற்றை பாதுகாக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளனர்.

காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி (வயது 50) என்பவர் அவருடைய வீட்டுக்கு செல்லும் வழியில் ஒருவர் வீடுகட்டிக்கொண்டு வழிவிட மறுப்பதாகக்கூறி மனுகொடுக்க வந்திருந்தார். அவர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குளிக்கும் நோக்கத்தில் மண்எண்ணெய் கேனுடன் வந்துள்ளார்.

இதை அறிந்த சத்துவாச்சாரி போலீசார் ஜெயந்தியை தடுத்து விசாரித்தனர். அப்போது அவர் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் மண்எண்ணெய் கேனை ஒருவரிடம் கொடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிற்க வைத்திருந்ததும், மனு கொடுத்துவிட்டு வந்து தீக்குளிக்க முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சீருடையில் உள்ள போலீசார் சென்றால் அவர் ஓடிவிடக்கூடாது என்பதற்காக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 2 பேரை ஜெயந்தியுடன் அனுப்பி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெயந்தியை சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்