அம்பேத்கர் நினைவுதினத்தையொட்டி தாதர் சைத்ய பூமியில் மக்கள் குவிந்தனர்
அம்பேத்கரின் நினைவுதினத்தையொட்டி தாதர் சைத்ய பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.
மும்பை,
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நினைவுதினம் நாளை மறுநாள்(புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அம்பேத்கரின் நினைவிடம் அமைந்துள்ள தாதர் சிவாஜிபார்க் சைத்ய பூமியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள்.இதற்காக மராட்டியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரெயில், பஸ்கள் மூலமாக சைத்ய பூமியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மராட்டியத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் வந்து உள்ளனர்.
இவர்கள் தங்குவதற்கு வசதியாக மும்பை மாநகராட்சி சார்பில் சிவாஜிபார்க் மைதானத்தில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பந்தல்களுக்கு வெளியே பாதுகாப்பு காரணம் கருதி மெட்டல் டிடெக்டர் கருவிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அதை கடந்து தான் பொதுமக்கள் மைதானத்திற்குள் செல்ல முடியும்.சைத்ய பூமிக்கு வருவோரின் பாதுகாப்பு கருதி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவித நிகழ்வுகளை தடுக்கும் வகையில் சைத்ய பூமி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.