பழமார்நேரி சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலைமறியல்

திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

Update: 2017-12-03 20:45 GMT

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க கோரி நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி நேற்று நாம் தமிழர் கட்சியின் திருவையாறு தொகுதி செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் திருக்காட்டுப்பள்ளி–பழமார்நேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீபிரியா, சார்லஸ்தேவி அகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் இன்று (திங்கட்கிழமை) உரிய அதிகாரிகளிடம் நேரில் பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுப்போம் என்று திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

 இந்த சாலைமறியலால் திருக்காட்டுப்பள்ளி–பழமார்நேரி பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்