வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த குறைந்தபட்ச விற்பனை வரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும் விக்கிரமராஜா பேச்சு

வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த குறைந்தபட்ச விற்பனை வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஈரோட்டில் விக்கிரமராஜா கூறினார்.

Update: 2017-12-03 22:15 GMT

ஈரோடு,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட மாநாடு ஈரோட்டில் நேற்று நடந்தது.

மத்திய– மாநில அரசுகளே சிறு வணிகர்களை வாழ விடு என்ற முழக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆர்.எம்.தேவராஜா சங்ககொடி ஏற்றினார். மாவட்ட பொருளாளர் கே.ராஜகோபால் இனிப்பு வழங்கினார்.

தொழில் அதிபர்கள் ஆர்.மோகனசுந்தரம், டி.நவநீதகிருஷ்ணன், ஆர்.காளீஸ்வரன், ஏ.,ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். மாநாட்டு விழா மலரை பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் வெளியிட்டனர். ஸ்ரீசத்யசாய் சமிதி அறக்கட்டளை தலைவர் என்.சிவநேசன், தொழில் அதிபர்கள் பி.சுப்பிரமணியம், ஆழ்வார், வினோத், ஜெகநாதன், தனபாலன், கந்தசாமி, வெங்கடாசலம், பொன்னுசாமி, பல்லவன் கிராம வங்கி வட்டார மேலாளர் ஆர்.சந்திரன், முதுநிலை மேலாளர் கே.கோமதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:–

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்தில் அனைத்து வணிகர்களும் உரிமம் பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். உரிமம் எடுக்கிறோம். ஆனால் உரிமம் வழங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கக்கூடாது. பல்வேறு இடங்களில் நேர்மையற்ற அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக தகவல்கள் வருகிறது. இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும்.

சாமானிய மளிகைக்கடை வியாபாரி பொருட்களை விற்பனை செய்பவர். அவர் விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொருட்களில் தரம் இருக்கிறதா? என்கிற சோதனையை நடத்தும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில்தான் நடத்த வேண்டும். குறிப்பாக எண்ணை தரமற்றது, கலப்படம் இருக்கிறது என்றால், அது எங்கே உற்பத்தி செய்யப்படுகிறது. எங்கே கலப்படம் செய்யப்படுகிறது என்று அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் அங்கு லட்சக்கணக்கில் பணம் லஞ்சம் வாங்கிக்கொண்டு எண்ணையை வெளி சந்தையில் விற்க அனுமதிக்கிறார்கள். பின்னர் சாமானிய வணிகர்கள் நடத்தும் கடைகளுக்கு சென்று சோதனை என்ற பெயரில் மாதிரி எடுத்து வைத்துக்கொண்டு லஞ்சம் கேட்டு பேரம் பேசுகிறார்கள். நேர்மையற்ற அதிகாரிகள் இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.

தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மூலம் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வரியால் மக்களும், வியாபாரிகளும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மக்களுக்காக கேட்க யாரும் இல்லை. ஆனால் வணிகர்களுக்காக கேட்க நாங்கள் இருக்கிறோம். 160 நாடுகளில் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளது. இதில் 28 சதவீதம் வரி இந்தியாவில் மட்டுமே இருக்கிறது. எங்கள் போராட்டத்தால் உணவுக்கூடங்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

சமானியர்கள் சாப்பிடும் பேக்கரி பொருட்களுக்கு 18 சதவீதம் வரி. வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் பீட்சா, பர்க்கருக்கு 5 சதவீதம் வரி. நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலைக்கு 18 சதவீதம் வரி. இறக்குமதி செய்யும் பாதாமுக்கு 5 சதவீதம் வரி. இதுதான் இன்றைய நிலை. சொந்த நாட்டில் பிறந்து தொழில் செய்வது தவறா?.

வணிகர்கள் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த குறைந்தபட்ச விற்பனை மாதம் ரூ.20 லட்சமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலைவாசியில் இது சாதாரணம். எனவே விற்பனை வரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும்.

வரி அதிகமானால் வரி ஏய்ப்பு அதிகமாகும். வரி குறைந்தால் வரி செலுத்துபவர்கள் முறையாக செலுத்துவார்கள் என்பதை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியிடம் வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மூலம் கிடைக்கும் வருவாயில், வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்க வேண்டும். இயற்கை பேரிடர், வணிகர்கள் மரணத்தின்போது முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசினார்.

மேலும் செய்திகள்