விளாத்திகுளம் அருகே தடையை மீறி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம்–லாரி சிறைபிடிப்பு பொதுமக்கள் போராட்டம்

விளாத்திகுளம் அருகே தடையை மீறி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம், லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2017-12-04 02:45 IST

விளாத்திகுளம்,

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மூட மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், தடையை மீறும் வகையில் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டியில் சிலர் தனியார் இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் 6 அடி ஆழம் வரை தோண்டி மணல் அள்ளி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜனதா, கம்யூனிஸ்டு, நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள், தடையை மீறி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தடையை மீறி மணல் அள்ளியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து லாரி விளாத்திகுளம் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பொக்லைன் எந்திரத்தின் சாவியையும் போலீசார் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் நேற்று இரவு விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தடையை மீறி மணல் அள்ளியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்