மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் வேறு எவரும் இல்லை சைதை துரைசாமி பெருமிதம்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் வேறு எவரும் இல்லை என முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி பேசினார்.

Update: 2017-12-03 22:15 GMT

மதுரை,

மதுரை மாநகர எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் இணைந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை மதுரையில் நடத்தியது. காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

ஊழலற்ற ஆட்சியை தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அவரது ஆட்சியில் ஒரு முறை நெசவாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சென்னையில் வேலை நிறுத்தம் அறிவித்திருந்தனர். அந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் இதுதொடர்பாக தகவல் அறிந்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு கூறினார். எம்.ஜி.ஆரின் இந்த நடவடிக்கையை பார்த்த தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

ஏழைகளும், தொழிலாளர்களும் வஞ்சிக்கப்படுவதை விரும்பாத ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. அவரைப் பார்த்து அந்த கட்சியின் நோக்கத்தை அதன்பின்னர் பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக செயல்படுத்தினார். தற்போது அவர்கள் இருவர் வழியிலும் நேர்மையான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. வாழ்வில் நேர்மையாக வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக எம்.ஜி.ஆர். திகழ்ந்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்