தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவையில் ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை திறப்பு

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை, கோவையில் திறக்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-03 22:00 GMT

கோவை,

தமிழ்நாட்டில் முதன்முறையாக ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை, கோவையில் திறக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 3 தலைவர்களின் சிலைகளும் ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ளதால் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் பார்வையிட்டு செல்கிறா£ர்கள்.

மறைந்த முதல்–அமைச்சர்களான அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களுக்கு, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. கோவை அவினாசிரோட்டில் அண்ணா முழு உருவ வெண்கல சிலை உள்ளது. இந்த சிலை 1996–ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த இடம் அண்ணா சிலை சந்திப்பு என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அண்ணா சிலையை மீண்டும் புதுப்பிக்கும் பணி நடந்தது.இதற்காக சிலையை சுற்றி மறைப்புகள் வைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தன.நேற்று காலை சிலையை சுற்றி இருந்த மறைப்புகள் அகற்றப்பட்டபோது புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையோடு எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா ஆகியோரது முழு உருவ வெண்கல சிலைகளும் புதிதாக அமைக்கப்பட்டு இருந்தன.

7 அடி உயரத்தில் ஒரே பீடத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் இரட்டை விரலை உயர்த்தி காண்பிப்பது போலவும், அண்ணா ஒருவிரலை உயர்த்தி காண்பிப்பது போலவும் இந்த வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.இவை நேற்று திறக்கப்பட்டன.

தமிழக முதல்–அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணம் அடைந்தார். அவர் மறைந்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், கோவையில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு இருப்பது கோவையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் ஒரே இடத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் முழு உருவ சிலைகள் இருப்பதால் அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் இதனை பார்வையிட்டபடி செல்கிறார்கள். ஒரு சிலர் சிலை முன்பு நின்றுகொண்டு தங்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்து மகிழ்கின்றனர்.

இதற்கிடையில் அனுமதி இன்றி இந்த சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. கூறியதாவது:– நெடுஞ்சாலை ஓரங்களில் புதியதாக சிலைகள் அமைக்க அரசு அனுமதி வழங்குவது இல்லை. மேலும் சமீபத்தில் கோர்ட்டு உத்தரவு படி சென்னை மெரினா கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள அண்ணா சிலையின் அருகில் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி முன்னாள் முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த சிலைகள் அமைக்க சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதா ? என்பது குறித்து தி.மு.க. ஆய்வு செய்யும். இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருக்கும். இதனால் கூடுதலாக 2 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது போக்குவரத்து பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்