காந்திபுரம் மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்: முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

Update: 2017-12-03 22:15 GMT

கோவை,

பொள்ளாச்சி தாலுகாவை பிரித்து ஆனைமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும். கோவை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டுள்ள பகுதிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கூடுதல் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு குடிநீர் அபிவிருத்தித் திட்டம் (பில்லூர்–3) ரூ. 750 கோடி மதிப்பீட்டில் அம்ருத் மற்றும் ஆசியன் வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

கவுண்டம்பாளையம்–வடவள்ளி கூட்டுக்குடிநீர் அபிவிருத்தி திட்டம் மூலம் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு 23 எம்.எல்.டி. குடிநீர் வழங்க தற்போது செயல்பட்டு வரும் குடிநீர் திட்டத்தின் கீழ் 32.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர்–3 திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படும்.

சிறுவாணி அணையின் கொள்ளளவை உயர்த்தும் வகையில், கேரள அரசின் அனுமதி பெற்று தூர்வாரப்படும். ரூ.241 கோடி மதிப்பீட்டில், 1.92 லட்சம் மக்கள் பயன் பெறும் வகையில், கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் மூப்பேரிபாளையம் பேரூராட்சிகள், திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சி, சூலூர் விமானப்படை தளம் மற்றும் திருப்பூர் மற்றும் பல்லடம் ஒன்றியங்களிலுள்ள 155 கிராம குடியிருப்புகளுக்கு பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர்த் திட்டம் நபார்டு வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்.

கோவை மாநகராட்சி, வ.உ.சிதம்பரம் பூங்கா வளாகத்தில் செயல்பட்டு வரும் மிருகக்காட்சி சாலை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தி பொது மக்களுக்கு பயன்படும் வகையில் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் புணரமைக்கப்படும்.

கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முதல் அடுக்கு மேம்பாலத்திற்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும்.

பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தேவம்பாடி, ஆவாலப்பம்பட்டி, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குற்பட்ட இலுப்பநத்தம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோலார்பட்டி ஆகிய 4 கிராமங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், வடசித்தூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம், பல்லடம், பொள்ளாச்சி, வால்பாறை மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.

கோவையில் உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி 121.82 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும். கோவை உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் காளப்பட்டி விமான நிலையம் வரை உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். கோவை விமான நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நகரை சித்ரா–குரும்பபாளையம் வழியாக இணைக்கும் 8.60 கி.மீ. நீள சாலையை மேம்படுத்தப்படும்.

ஆனைமலையாறு, நல்லாறு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும். ஆழியாறு திட்டத்தினை இறுதியாக செயல்படுத்த ஆனைமலையாறு திட்டம் கடந்த 27 ஆண்டுகளாக செயல்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பல இடர்பாடுகளால் நிறைவேற்றப்படவில்லை. தற்போது இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டங்களை செயல்படுத்த, அனுபவம் வாய்ந்த, மூத்த அதிகாரிகள், மூத்த பொறியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழு விரைவில் அமைக்கப்படும். சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்த வேண்டும், அதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஆய்வு செய்யும். அத்திக்கடவு–அவினாசித் திட்டத்தில் ஒரு சில பகுதிகள் விடுபட்டுள்ளன. அதன்படி காரமடை ஒன்றியம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றித்திலுள்ள விடுபட்டப் பகுதிகளை சேர்த்து புதிதாக ஒரு திட்டம் வகுக்கப்படும். அதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படும். கோவை விமான நிலையத்தை விரிவபடுத்த தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும்.

தமிழகத்திலேயே தொழில்கள் நிறைந்த பகுதி கோவை மாவட்டம். இங்கு இன்னும் பல தொழில்கள் வருவதற்கும், சாப்ட்வேர் நிறுவனங்கள் வருவதற்கும் தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கும், இவ்வாறு முதல்–அமைச்சர் கூறினார்.

மேலும் செய்திகள்