மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

‘மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது. கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாகவே எப்போதும் விளங்கும்’ என்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2017-12-03 22:15 GMT

கோவை,

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிபேசும்போது கூறியதாவது:–

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கோவையில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. எம்.ஜி.ஆருக்கும், கோவைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சதிலீலாவதி படத்தில் அவர் அறிமுகமாகி, முதல் சம்பளம் பெற்றதும் இந்த கோவையில்தான். மலைக்கள்ளன் படம் தயாரிக்கப்பட்டதும் கோவையில்தான்.

கோவையில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 2010–ம் ஆண்டு, ஜூலை மாதம் 13–ந்தேதி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க.வுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தினார். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாகவே விளங்கும். 2006–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2011–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மீண்டும் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். 2016–ல் ஒன்று குறைந்து 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். எப்போதும் அ.தி.மு.க.வுக்கு பெருமை சேர்த்தது கோவை மாவட்ட மக்கள்தான். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கோவை நகருக்கு ஸ்மார்ட் சிட்டி, கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. காந்திபுரம் மேம்பாலத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மெட்ரோ ரெயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த விழா, கோவை மாவட்ட மக்களுக்கான திட்டங்கள் தொடக்கவிழா, அடிக்கல் நாட்டுவிழாவாக அமைந்துள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கோவையில் நடக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் செயல்பட்டார். விபத்தில் இறந்த ரகுபதியின் மரணத்தை வைத்து அரசியல் செய்தார். ரகுபதியின் மரணத்துக்கு இந்த மேடையில் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். கோவையில் தி.மு.க.வினர் செம்மொழி மாநாட்டை நடத்தியபோது சாலைகளை ஆக்கிரமித்து பேனர்களை அமைத்தனர். குடும்ப விழா போல் நடத்தினர். நாங்கள் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் விழாவாக நடத்தியுள்ளோம். நாங்கள் நல்லது செய்தாலும் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அவர் எந்த காலத்திலும் முதல்–அமைச்சர் ஆக முடியாது. அவரது கனவு பலிக்காது. எந்த காலத்திலும் மக்களுக்கான இயக்கம் அ.தி.மு.க. இந்த ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறாது. வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், ஆர்.கே.நகர் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். 1972–ம் ஆண்டு அ.தி.மு.கவை தொடங்கியபோது வ.உ.சி மைதானத்தில்தான் தனது முதல் கூட்டத்தை நடத்தினார். இந்த சிதம்பரம் பூங்காவில்தான் அவர் முதல் போர் பரணி தொடங்கினார். இதேபோல் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் 13–ந்தேதி வ.உ.சி. மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அது மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. அதன்பின்னர் மாபெரும் வெற்றி பெற்றோம்.

சிலர் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பகல் கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இப்போது இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறோம். இந்த தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இதற்கு கொங்குநாடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கட்டியம் கூறுகிறது. வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், 2021–ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றி பெறுவோம். இந்த பிரமாண்ட கூட்டம் நாளைய வரலாற்றை எடுத்துரைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்