குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மீனவ கிராம மக்கள் திரண்டு சாலை மறியல்

குமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் மீனவ கிராம மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலில் மாயமான மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2017-12-03 23:30 GMT

கொல்லங்கோடு,

குமரி மாவட்டம் கொல்லங்கோடு, நீரோடி போன்ற கடற்கரை கிராமங்களை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி, நீண்டகரை போன்ற பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 படகுகளில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். கடந்த 30–ந் தேதி ஒகி புயல் தாக்கியது. இதில் மீனவர்களின் படகுகள் சிக்கிக்கொண்டன.

அவற்றில் 16 படகுகள் கரை திரும்பின. மீதமுள்ள 7 படகுகள் கரை திரும்பவில்லை. அவற்றில் இருந்த அந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதனால், மாயமான மீனவர்களின் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இந்தநிலையில், கொல்லங்கோடு பகுதியில் மீனவ மக்களின் கோரிக்கையை கேட்க அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், மாயமான மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து மாயமான மீனவர்களை மீட்க கோரி நேற்று காலையில் கொல்லங்கோடு கண்ணநாகம் சந்திப்பில் மீனவ கிராம மக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு சென்று மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லங்கோடு மற்றும் நித்திரவிளை போலீசார் உடனடியாக அங்கு குவிக்கப்பட்டனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இந்தநிலையில், போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும் குளச்சல் போலீஸ் உதவி சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாயமான மீனவர்களை மீட்க தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், எனவே போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் மதியம் 1.30 மணியளவில் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

புயலில் சிக்கி கரைதிரும்பிய கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த மீனவர்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நிலைகுறித்து கூறிய பரபரப்பு தகவல் வருமாறு:–

நாங்கள் கடந்த 30–ந் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, பயங்கர புயல் காற்று வீசியது. ராட்சத அலைகள் எழுந்து படகுகள் மீது மோதின. இதில் படகுகள் நாலாபுறமாக கடல் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டன. சில படகுகள் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

சில படகுகள் ராட்சத அலையில் இருந்து தப்பி கரைவந்து சேர்ந்தன. அவ்வாறு கரை திரும்பியவர்களில் நானும் ஒருவன். கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர்கள், படகுகளின் உடைந்த பாகங்கள், மரக்கட்டை, டீசல் கேன் போன்றவற்றை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இன்னும் அவர்கள் கடல் பகுதியில் எங்காவது தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை பத்திரமாக மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

மேலும் செய்திகள்