குமரி மாவட்ட மீனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? பட்டியலிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

குமரி மாவட்ட மீனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்டியலிட்டு விளக்கம் அளித்தார்.;

Update: 2017-12-03 23:00 GMT

நாகர்கோவில்,

‘ஒகி‘ புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதப்பகுதிகளை துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘ஒகி‘ புயல் 29–ந் தேதி இரவு கன்னியாகுமரி கடல் நோக்கி நகரும் என்ற செய்தியை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு தமிழக முதல்–அமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

பாதுகாப்பாக அனைத்து முன் ஏற்பாடுகளும் மாவட்டம் முழுவதும் நல்லமுறையில், சீரிய முறையில் எடுக்கப்பட்டது. கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்ற ஆலோசனையும் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. காவல்துறை, வருவாய்த்துறை, மீன்வளத்துறை என அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்கப்பட்டது.

புயலின் வேகம் திசை மாறிச்சென்றிருந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு கடுமையான அளவுக்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. 3,600 மின்கம்பங்கள் சேதம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

மீனவர்களை பொறுத்தவரையில் ‘ஒகி‘ புயல் வருகிற 29–ந் தேதி கரையை கடக்கும் என்று சொல்லி அதற்கு முன் 3, 4 தினங்களுக்கு முன்பாகவே அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே கடலுக்கு சென்றிருந்த மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன். உடனடியாக வருவாய்த்துறை அமைச்சர் 30–ந் தேதி காலை புறப்பட்டு வந்து பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவரைத்தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சரும் இங்கு வந்து உடனடியாக மின் இணைப்பு தருவதற்கான பூர்வாங்கப்பணிகளை மேற்கொண்டார்.

இவ்வாறு அரசினுடைய மீன்வளத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை மற்றும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நல்லபல நடவடிக்கைகளை எடுத்ததின் காரணமாக இன்று நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அது முழுமையாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.

பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தின் உட்புறங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய ரப்பர், நெல் விவசாயம், வாழை போன்ற பயிர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம். அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் வடிந்துள்ளது. கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்ததும் அவர்களுக்கு உறுதியாக, உரிய நிவாரணம் அரசின் சார்பில் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள் பிரச்சினையைப் பொறுத்தமட்டில் குமரி மாவட்டத்தில் 5,759 பாரம்பரிய படகுகளில் 5,720 படகுகள் பாதுகாப்பாக உள்ளது. 39 படகுகள் இன்னும் திரும்பவில்லை. அலைகளில் 6 படகுகள் திரும்ப வந்துள்ளன. 33 படகுகள் தேடப்பட்டு வருகின்றன. 1,229 விசைப்படகுகளில் 945 படகுகள் பாதுகாப்பாக உள்ளன. 200–க்கும் மேற்பட்ட படகுகள் இதர மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ள விவரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களில் உள்ள படகுகளில் 2,384 மீனவர்கள் உள்ள விவரம் அரசுக்கு தெரிய வந்துள்ளது. 30–11–2017 முதல் 197 மீனவர்கள் திரும்ப வந்துள்ளனர். 97 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இதர மாநிலங்களில் மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை, மீன்வளத்துறை மூலம் மேற்கண்ட இதர மாநிலங்களில் உள்ள மீன்பிடி படகுகள் மற்றும் 2,384 மீனவர்களை தொடர்பு கொண்டு அவர்களை மீட்பதற்கு தமிழக அரசின் மூலம் குழுக்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ஆகிய படைகளின் மூலம் காணாமல் போன படகுகள் மற்றும் மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மீனவ கிராமம் வாரியாக மீனவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

பலத்த மழையின் காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதற்காக, அந்தப்பணிகளும் நடைபெற்று வருகிறது. ஆக தமிழக அரசு எடுத்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததின் காரணமாக உயிர்ச்சேதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீனவர்கள், விவசாயிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அந்த அளவுக்கு நிவாரண உதவிகள் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும். தற்போது முதல்–அமைச்சரால் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.25 கோடி முன் ‘டோக்கன்‘ ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர செலவுகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். கணக்கெடுக்கும் பணி அனைத்தும் முடிந்தபிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும். நிவாரண அறிக்கை விரிவாக தயார் செய்து, மத்திய அரசுக்கு உரிய முறையில் அளிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர்கள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, விஜயகுமார் எம்.பி., கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், போலீஸ் சூப்பிரண்டு துரை மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். குமரி மாவட்டத்தில் எழுந்துள்ள மீனவர்கள் பிரச்சினை, மின்சாரம் மற்றும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி ஆகியோர் சில புள்ளி விவரங்களை தெரிவித்து, பதில் அளித்தனர்.

முன்னதாக விஜயகுமார் எம்.பி. இல்லத்துக்கு சென்றிருந்த துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை மற்றும் அருட்பணியாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்