தண்ணீர் திறப்பதை முறைப்படுத்தக்கோரி விவசாயிகள் மறியல்

மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-02 23:34 GMT

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்த அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும்.

இதனால் அணையின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்ததால், கடந்த அக்டோபர் மாதம் 15–ந்தேதி முதல் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 36 அடியாக குறைந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 42 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை நம்பி, புதிய ஆயக்கட்டு பகுதியில் ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 35 அடிக்கு குறைந்து விட்டால் புதிய ஆயக்கட்டு வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பு இல்லை.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 35 அடிக்கு குறைய வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

எனவே மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று புதிய ஆயக்கட்டு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனை வலியுறுத்தி வத்தலக்குண்டு–பெரியகுளம் சாலையில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். அதன்பின்னரே விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக வத்தலக்குண்டு–பெரியகுளம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்