போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும்
போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும் என்று இந்திரா கிளினிக் திறப்பு விழாவில் மந்திரி ரமேஷ்குமார் பேசினார்.
பெங்களூரு,
பெங்களூருவில் பயணிகள், போக்குவரத்து ஊழியர்களின் வசதிக்காக இந்திரா கிளினிக் திட்டம் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மெஜஸ்டிக் மற்றும் யஷ்வந்தபுரம் பஸ் நிலையங்களில் இந்திரா கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை மந்திரி ரமேஷ்குமார் கலந்து கொண்டு புதிய இந்திரா கிளினிக்கை திறந்து வைத்தார்.பின்னர் விழாவில் மந்திரி ரமேஷ்குமார் பேசியதாவது:–
மனிதன் வாழ்க்கையில் நாளைக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்சில் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு திடீரென்று ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்பட்டால், இந்திரா கிளினிக்கில் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பெங்களூருவை போல் மைசூரு, உப்பள்ளி, பெலகாவி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் இந்திரா கிளினிக் திறக்க வேண்டியது கட்டாயமாகும்.அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வேலை செய்கிறார்கள். அதுவும் டிரைவர் பணி மிகவும் கடினமானது. அவர்களுக்கு தங்கள் உயிரை விட பஸ்களில் பயணம் செய்பவர்களின் உயிரை பாதுகாக்கும் பொறுப்பும் உள்ளது. பணியில் இருக்கும் போதே அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது உண்டு. எனவே போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு உயர்தர சிகிச்சை இலவசமாக கிடைக்க வேண்டும். அது அவசியமானதாகும். அவர்கள் வாங்கும் சம்பளத்தின் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சென்று உயர்தர சிகிச்சை பெற இயலாது.
இதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாநிலத்தில் முக்கிய நகரங்களில் உயர்தர மருத்துவமனைகளை தொடங்க முன்வர வேண்டும். அந்த மருத்துவமனைகள் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். இன்றைய காலத்தில் கல்வி வியாபாரம் ஆகிவிட்டதால், போக்குவரத்து ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. எனவே போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சையும், அவர்களது பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் சித்தராமையா முதல்–மந்திரி ஆவது உறுதி. அதனால் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான திட்டங்கள் முதல்–மந்திரியுடன் பேசி நிறைவேற்றப்படும்.
இவ்வாறு மந்திரி ரமேஷ்குமார் பேசினார்.