ஜி.எஸ்.டி. சாலையில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

மறைமலைநகர் ஜி.எஸ்.டி. சாலையில் நேற்று மாலை பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் ஒடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-12-02 22:56 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அஸ்வின்(வயது21). டிப்ளமோ படித்த இவர் மறைமலைநகரை அடுத்த மல்ரோஜபுரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு தற்காலிகமாக ஆட்களை பணியில் அமர்த்தும் தொழில் செய்து வந்தார்.

நேற்று மாலை அஸ்வின் மல்ரோஜபுரத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் பேரமனூர் நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அஸ்வின் மீது மோதி வழிமறித்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அஸ்வினை அந்த 3 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வீச்சு அரிவாளால் வெட்டத் தொடங்கியது.

உடனே அஸ்வின் அவர்களிடம் இருந்து ஜி.எஸ்.டி சாலையிலே தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அஸ்வினை துரத்திச் சென்றது. ஆனாலும் அந்த கும்பலினர் அவரை விடாமல் துரத்தியது. பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடிய அஸ்வினை ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை அப்போது ஜி.எஸ்.டி. சாலையில் சென்ற பஸ்சில் பயணம் செய்த பயணிகள், மற்றும் சாலையில் சென்ற ஏராளமான வாகன ஓட்டிகள் தங்கள் கண்முன்னே நடந்த இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

படுகொலை பற்றிய தகவல் கிடைத்ததும் மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஸ்வின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறைமலை நகரில் பட்டப்பகலில் ஜி.எஸ்.டி சாலையில் வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரமனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட அஸ்வினின் சித்தப்பா செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

எங்க அண்ணன் மகன் அஸ்வின் மீது இதுவரை போலீஸ் நிலையத்தில் எந்த விதமான புகார்களும் இல்லை, அவனை எதற்காக வெட்டி கொலை செய்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை, போலீஸ் உண்மையான குற்றவாளிகளை பிடிக்கும் வரை நாங்கள் போலீசில் புகார் தரமாட்டோம், ஆஸ்பத்திரியில் உள்ள உடலையும் வாங்கமாட்டோம், உண்மை குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்