நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடிநீர், சொத்து வரி உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்; நாராயணசாமி பேட்டி
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் குடிநீர், சொத்து வரி உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்– அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
காரைக்காலில் நீதிமன்ற வளாகம் கட்டும் பணி 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. வக்கீல்கள் அறை, வங்கி வசதி, உணவகம், அங்காடி, நீர் தேக்கத்தொட்டி ஆகிய அனைத்தும் கட்டுவதற்கு ரூ.6 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்பகரத்தூரில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலை ரூ.12 கோடி செலவில் இருவழிப்பாதையாக பழுது பார்க்கப்பட உள்ளது.
ஊசுடு ஏரி ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. கரையோரம் முற்றிலும் அழகுபடுத்தப்படும். பேரா கிளைடிங் (நீர் விளையாட்டு) தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சின்னையாபுரத்தில் ரூ.11 கோடியே 39 லட்சம் செலவில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல திட்டங்களை செய்து வருகின்றோம்.
புதுச்சேரி நகராட்சி மற்றும் நெடுங்காடு, டி.ஆர்.பட்டினம் உள்ளிட்ட பல கொம்யூன் பஞ்சாயத்துக்களில் போதிய அளவு வருமானம் இல்லை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் கூட பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த குடிநீர், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தினோம். இந்த வரி உயர்வு குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி மறு பரிசீலனை செய்வோம்.
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்தபோது சட்ட திருத்தம் செய்யாமல் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தனியார் பள்ளிகள் மனு தாக்கல் செய்தன. இதுகுறித்து அமைச்சரவையில் கலந்து ஆலோசித்து சட்டம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டது. புதுச்சேரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்க டெல்லி, ஐதராபாத் நிறுவனங்களுடன் பேசி வருகின்றோம்.
தற்போது மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் வடிகால் பிரச்சினை இல்லை. மழை பெய்தால் நீர் நிற்கும் இந்திராகாந்தி சதுக்கத்தில் தற்போது மழைநீர் நிற்பதில்லை. தாழ்வான பகுதிகளான பாவாணன் நகர், கிருஷ்ணா நகரில் தேங்கி நிற்கும் நீர் மின்மோட்டர் மூலம் இறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் சென்னையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.