‘கண்முன்னே கடலில் மூழ்கிய 3 பேரை மீட்க முடியவில்லையே’ கரை திரும்பிய சக மீனவர்கள் உருக்கமான தகவல்

“எங்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய 3 மீனவர்களை மீட்க முடியவில்லையே“ என்று அவர்களுடன் கடலுக்கு சென்றிருந்த சக மீனவர்கள் உருக்கமான தகவல்களை கூறியுள்ளனர்.

Update: 2017-12-02 23:30 GMT
குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சந்திரா பாவசன் என்கிற ஜஸ்டின் பாபு (வயது 39). இவரும் அந்த பகுதியை சேர்ந்த மேலும் 13 மீனவர்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடல் பகுதியில் விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது புயல் வீசுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அவசரமாக கரை திரும்பினர்.

கரையை நெருங்கி கொண்டிருந்த போது, பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து விசைப்படகு மீது மோதின. இதனால் படகு நிலைதடுமாறி அங்கும் இங்குமாக தள்ளாடியது. அப்போது, படகில் இருந்த ஜஸ்டின் பாபு எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் போராடியும் மீட்க முடியவில்லை. இதனால் கடலில் மூழ்கிய அவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இதையடுத்து மீதமுள்ள 13 மீனவர்களும் தேங்காப்பட்டணம் கடற்கரைக்கு சோகத்துடன் வந்து சேர்ந்தனர். அங்கு அவர்கள் கூறுகையில், சூறாவளி காற்றில் சிக்கியதில் படகு அங்குமிங்கும் தள்ளாடியது. அப்போது ஜஸ்டின் பாபு தவறி கடலுக்குள் விழுந்து விட்டார். அவரை மீட்க கயிறு போன்றவற்றை போட்டோம். ஆனால் அவர் எங்கள் கண்முன்னாலேயே கடலில் மூழ்கி விட்டார். அவரை பற்றிய வேறு எந்த தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை“ என்று சோகத்துடன் தெரிவித்தனர்.

ஜஸ்டின்பாபு மாயமான தகவல் குறித்து கடலோர பாதுகாப்புத்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்டின்பாபுவுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

இதேபோல் குளச்சலை சேர்ந்த டெல்பின்ராஜ் (47), டேவிட்சன் (31) ஆகிய 2 மீனவர்கள் சூறாவளி காற்றால் படகில் இருந்து தவறி விழுந்து கடலில் மூழ்கியுள்ளனர். அவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த சக மீனவர்கள், 2 பேரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் சோகத்துடன் கரை திரும்பினர்.

தங்கள் முன்னே 2 பேர் கடலில் மூழ்கியது குறித்து அந்த மீனவர்கள் அதிகாரிகளிடமும், ஊர்மக்களிடமும் கூறியுள்ளனர். டெல்பின்ராஜ், டேவிட்சன் ஆகியோரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்