குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Update: 2017-12-02 23:00 GMT

நாகர்கோவில்,

‘ஒகி’ புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஏராளமானோர் மாயமாகி உள்ளனர். அவர்களில் பலர் இதுவரை கரை திரும்பவில்லை.

குறிப்பாக பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை போன்ற மீனவ கிராமங்களில் இருந்து விசைப்படகுகளில் சென்றவர்கள் பலர் கரை திரும்பவில்லை. கடந்த 30–ந் தேதி வீசிய புயலுக்கு பின்பு அந்த மீனவர்கள் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே மத்திய–மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு மாயமான மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று சின்னத்துறை என்ற மீனவ கிராமத்தில் சாலை சந்திப்பில் மீனவர்களும், ஏராளமான பெண்களும் திரண்டு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீனவ பெண்கள் குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ., நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வசந்தகுமார் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன. இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, தக்கலை கோட்டாட்சியர் ராஜகோபால் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதிகாரிகளுடன் மீனவ மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் மீனவர்கள் மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மீனவ மக்கள் கூறும்போது, ‘‘கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்களை மீட்க மத்திய–மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த வேதனையில் உள்ளோம். மீன் பிடிக்க சென்றவர்கள் எப்போது திரும்பி வருவார்கள் என எதிர்பார்த்து அவர்களது குடும்பத்தினரும், குழந்தைகளும் பரிதவிப்பில் உள்ளனர். எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை தொடர்வோம்’’ என்றனர்.

இதற்கிடையே போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து மற்றவர்கள் முதல் உதவி அளித்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்