நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி மோட்டார்சைக்கிளுடன் கிணற்றுக்குள் பாய்ந்த வாலிபர் பரிதாப சாவு

நாய் குறுக்கே வந்ததால் தடுமாறி, மோட்டார்சைக்கிளுடன் கிணற்றுக்குள் பாய்ந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-12-02 22:45 GMT

கடத்தூர்,

கோபி அருகே உள்ள கடத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 29). இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 9 மாதமான பிரபா என்ற பெண் குழந்தை உள்ளது. கனகராஜ் கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

வழக்கம்போல் நேற்று காலை கனகராஜ் கடத்தூரில் இருந்து கொளப்பலூருக்கு மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்றுகொண்டு இருந்தார்.

அயலூர்–காமராஜர் நகர் ரோட்டில் சென்றபோது, திடீரென ஒரு நாய் குறுக்கே வந்தது. நிலை தடுமாறிய கனகராஜ் நாய் மீது மோதினார். மேலும் நிற்காமல் ரோட்டோரத்தில் இருந்த ஒரு கிணற்றுக்குள் மோட்டார்சைக்கிளுடன் பாய்ந்தார். நாய் அதே இடத்தில் இறந்தது.

100 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 25 அடிக்கு தண்ணீர் இருந்தது. மோட்டார்சைக்கிளுடன் உள்ளே விழுந்த கனகராஜ் படுகாயம் அடைந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

அந்த வழியாக வாகனத்தில் வந்த ஒருவர் கனகராஜ் கிணற்றுக்குள் விழுந்ததை பார்த்து, உடனடியாக கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி கனகராஜின் உடலையும், மோட்டார்சைக்கிளையும் மேலே கொண்டு வந்தார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த சிறுவலூர் போலீசார் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த கனகராஜின் உடலை பார்த்து அவருடைய மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்