கட்சியை உடைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

கட்சியை உடைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு பலிக்காது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2017-12-02 22:45 GMT

தலைவாசல்,

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைவாசல் வந்தார். அவருக்கு கெங்கவல்லி மருதமுத்து எம்.எல்.ஏ., மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். பின்னர் தலைவாசல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

கொட்டும் மழையிலும் என்னை வரவேற்க காத்து நிற்கிறீர்கள். கெங்கவல்லி தொகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். பருவமழை பொழிந்து விவசாயதொழில் சிறப்பாக உள்ளது. இறைவன் ஆசியுடன் நல்ல மழை பொழிந்து வருகிறது. இந்த நல்லாட்சியில் சிறப்பான நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நீதியும், நேர்மையும் நம்மிடம் உள்ளதால், மக்கள் சக்தியோடு நமக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியை உடைத்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். அவரது பகல்கனவு ஒருபோதும் பலிக்காது. இது உழைப்பாளிகள் இயக்கம். ஆட்சியை கவிழ்க்க யாராலும் முடியாது. அ.தி.மு.க.வை கண்டு தி.மு.க. அஞ்சுகிறது. எதிர்த்து போட்டியிட பயப்படுகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. ஜெயலலிதா நல்லாசியோடு அரசின் சாதனைகளால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்.

மு.க.ஸ்டாலின் கூட்டணிக்காக அனைத்து கட்சியினரையும் கூவிகூவி அழைத்து வருகிறார். கொல்லைப்புறம் வழியாக தி.மு.க. ஆட்சியை பிடிக்க நினைக்கிறது. அ.தி.மு.க.ஆட்சி மக்கள் சக்தியோடு என்றும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதில் எம்.பி.க்கள் டாக்டர் காமராஜ், சுந்தரம், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.எம்.சின்னத்தம்பி, ராஜா, வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவிகலெக்டர் செல்வன், தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ப.இளங்கோவன், வீரகனூர் நகர செயலாளர் சிவகுமார், கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் கூடமலைராஜா, கெங்கவல்லி நகர செயலாளர் சிவப்பிரகாசம், தம்மம்பட்டி நகர செயலாளர் பாலசுப்பிரமணி, தெடாவூர் நகர செயலாளர் ஆசைத்தம்பி, செந்தாரப்பட்டி நகர செயலாளர் பழனிசாமி, நாவக்குறிச்சி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன், தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் வேல்முருகன், காமக்காபாளையம் வக்கீல் செல்வராஜ் ஆகியோர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்