கட்டுமான தொழிலதிபர் மீது வழக்கு ரூ.3.65 கோடி மோசடி

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:– சென்னையை சேர்ந்த கே.ஆர்.கண்ணன் என்பவருக்கும், எனக்கும் 2002–ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டது.

Update: 2017-12-02 21:45 GMT

மதுரை,

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

சென்னையை சேர்ந்த கே.ஆர்.கண்ணன் என்பவருக்கும், எனக்கும் 2002–ம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டது. அவர் தன்னுடைய கட்டுமான தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதால், என்னை பங்குதாரராக சேருமாறு வற்புறுத்தினார். அவரது பேச்சை நம்பி நான் சேமித்து வைத்திருந்த ரூ.40 லட்சத்தை 2004–ம் ஆண்டில் அவரிடம் கொடுத்தேன். அதன்மூலம் மதுரையில் கட்டிடங்கள் கட்டப்பட்டு விற்கப்பட்டன. 2012–13–ம் ஆண்டில் இந்த தொழிலில் இருந்து நான் முழுமையாக விலகிக்கொள்கிறேன். எனக்கு சேர வேண்டிய பங்குத்தொகையை கொடுத்துவிடுங்கள் என்று கே.ஆர்.கண்ணனிடம் கேட்டேன். அதன்படி நாங்கள் கணக்கு பார்த்தபோது ரூ.3 கோடியே 65 லட்சம் எனக்கு தர வேண்டி இருந்தது. இந்த பணத்தை தருமாறு கேட்டபோது அவர் என்னை மிரட்டினார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், மனுதாரர் அளித்த புகார் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கே.ஆர்.கண்ணன் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்