கொடுங்கையூரில் குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி மெக்கானிக் கால் நசுங்கியது

குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி மெக்கானிக் கால் நசுங்கியது. லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-02 23:00 GMT
பெரம்பூர்,

திருவள்ளூரை அடுத்த மணவாள நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் வேலன்(வயது 25). லாரி மெக்கானிக்கான இவர், சென்னை கொடுங்கையூர் ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள ஒரு ‘ஒர்க் ஷாப்பில்’ வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை வேலன், ‘ஒர்க் ஷாப்பில்’ இருந்து மோட்டார் சைக்கிளில் வியாசர்பாடி நோக்கி சென்றார். கொடுங்கையூர் குப்பை கிடங்கு அருகே ராஜரத்தினம் நகர் பகுதியில் உள்ள சந்திப்பில் வந்த போது அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிரே குப்பை கிடங்கு நோக்கி வந்த சென்னை மாநகராட்சி குப்பை லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேலன் மீது குப்பை லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் கால் நசுங்கியதால் வேலன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலனை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து நடந்த உடன் குப்பை லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவரான தண்டையார்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்த குமரவேல் என்பவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குப்பை லாரியின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

மேலும் குப்பை கிடங்குக்கு வரும் குப்பை லாரிகள் வேகமாக வந்து செல்வதால் இந்த பகுதியில் இதுபோல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி சென்னை கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் குமரவேலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்