ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கே சொந்தம்; அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி எங்களுக்கே சொந்தம் என்று திருப்பூரில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறினார்.
திருப்பூர்,
திருப்பூரில் நேற்று நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்ற செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் போட்டியிட்டாலும் எங்களுக்கு கவலையில்லை. எம்.ஜி.ஆர். கண்ட வெற்றி சின்னம் இரட்டை இலை எங்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதேபோல் ஒரு வரலாறு கடந்த 1989–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் எங்களுக்கு கிடைத்தபோது, அன்றைக்கு ஆளும் கட்சியாக தி.மு.க. இருந்தது.
அப்போது மருங்காபுரி, மதுரை இடைத்தேர்தலில் சிறப்பான வெற்றியை இரட்டை இலை சின்னம் பெற்றது. அந்த வகையில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற்று ஆளும் கட்சியான தி.மு.க.வை தோற்கடித்து வெற்றியை பெற்றோம்.
இன்றைக்கு நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கிறோம். எம்.ஜி.ஆர். ஆசியும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் எங்களை வழிநடத்துகிற நேரத்தில் நிச்சயமாக வெற்றி எங்களுக்கே சொந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.