இன்னும் ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் 110 சித்த மருத்துவர்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு மாதத்தில் 110 சித்த மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2017-12-02 23:00 GMT

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு, புதிக கட்டிடங்களை கட்டுவது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கஞ்சம்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பதில்லை என்று புகார் தெரிவித்தனர். உடனே அவர் துணை இயக்குனரை தொடர்பு கொண்டு கஞ்சம்பட்டியில் இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டார்.

மேலும் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை வாங்கினார். ஆய்வின் போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தாசில்தார் செல்வபாண்டியன், கோவை மாவட்ட மருத்துவ பணிகள் மற்றும் பொது சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சவுந்தராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் அப்பு மற்றும் பலர் உடன் இருந்தனர். ஆய்வுக்கு பின் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மருத்துவ துறையில் தமிழகம் தலைசிறந்து விளங்குவதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது. தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 6 லட்சம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். 80 ஆயிரம் பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனர். 2 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் புதிதாக 580 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 96 சதவீத காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள 4 சதவீதத்தை 6 மாதத்தில் நிரப்பப்படும். பொதுசுகாதார துறையின் கீழ் இயங்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களே இல்லாத நிலை உருவாக்கப்பட்டு உள்ளது.ராமநாதபுரம், நாகபட்டிணம், கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் கூட டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

விரைவில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் செவிலியர் புதிதாக 800 முதல் 1000 பேர் வரை நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் 110 சித்த மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஒரு சில இடங்களில் ஆஸ்பத்திரிகளில் சிறு, சிறு தவறுகள் நடைபெறுகிறது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தொடர்பாக சம்பந்தபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்