வறுமையில் தவழ்ந்து திறமையில் உயர்ந்தவர்கள்

சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில், சினிமாவை மட்டுமே சுவாசித்து, உயர்ந்த நிலையை எட்டியவர்களும் உண்டு.

Update: 2017-12-02 07:16 GMT
சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து, ஒரு வேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு, பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நட்சத்திரங்களாக மாறியவர்களின் கதை கோடம்பாக்கத்தில் நிறைய இருக்கிறது. இங்கு மட்டுமல்ல.. ஹாலிவுட்டில் கூட இதுபோன்ற கதைகள் இருக்கின்றன.

ஹாலிவுட்டில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயர்ந்தவர்கள் பலர் உண்டு. அதே சமயம் சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில், சினிமாவை மட்டுமே சுவாசித்து, உயர்ந்த நிலையை எட்டியவர்களும் உண்டு. நாம் இங்கே பார்க்கப்போவது இரண்டாவது ரகத்தினரைப் பற்றி..

மரியா

நடிகையும், பாடகியுமான மரியா கேரி, சிறுவயதில் ஏழ்மையால் வாடியுள்ளார். பின்னர் தான் லாங் ஐலேண்டில் இருந்து நியூயார்க் வந்து பாடகியானார். வறுமை.. ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு தனிக் கதையை வைத்திருக்கும். மரியாவின் கதையும் அவற்றில் ஒன்றுதான். மரியா பிரபலமாகாத நேரத்தில், அவர் பாட்டுப் பாடி கூட்டத்தைச் சேர்ப்பதை பயன்படுத்தி, மரியாவின் நண்பர்கள் கூட்டத்திற்குள் புகுந்து பணத்தைத் திருடுவார்களாம். அந்த அளவுக்கு அவரது நிலைமை மோசமானதாக இருந்திருக்கிறது. இந்த முன் கதையை மரியாவே கூறியிருக்கிறார்.

டி கேப்ரியோ

‘டைட்டானிக்’ படத்தில் ஏழை இளைஞனாக நடித்து புகழ்பெற்ற டி கேப்ரியோ, நிஜத்திலும் ஏழை தான். அவர் வளர்ந்த இடம் மிகவும் மோசமானது. போதை பொருட்கள் விற்பனை, விபசாரம், ரவுடிகளின் அட்டகாசம் என்ற கடினமான சூழலில் வளர்ந்தவர் அவர். ஹாலிவுட் சினிமா வாய்ப்புகளை நம்பி பலமுறை பட்டினி கிடந்திருக்கிறார். இயக்குனர்களின் அலட்சியத்தில் பல பொழுதுகளை பசியுடனே கழித்திருக்கிறார். ஆனால் ‘டைட்டானிக்’ திரைப்படம் டி கேப்ரியோவிற்கு, உயிர்கொடுத்தது. சில ஆண்டுகளிலேயே டி கேப்ரியோ பெரும் பணக்காரராக வளர, அந்தப் படம் தான் விதை போட்டது.

ஜஸ்டின் பீபர்

இளசுகளை தன்னுடைய பாடல்களால் சுண்டி இழுப்பவர், ஜஸ்டின் பீபர். இளம் வயதில் கோடீஸ்வரரான இவரும், ஒரு காலத்தில் வறுமையில் சிக்கி தவித்தவரே. இன்று பல கோடி மதிப்பிலான வீட்டில் வாழ்ந்து வரும் ஜஸ்டின், ஒரு காலத்தில் எலிகள் விளையாடிய வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார். இருப்பினும் ஜஸ்டினின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக... ஜஸ்டினின் வாழ்க்கையும் பிரபலமாகி விட்டது.

ரவ்லிங்

ஹாரி பாட்டர் புத்தகங்கள் மூலம் உலகப் பிரபலம் ஆனவர் ஜே.கே.ரவ்லிங். இவர் பிரபலமாக மாறும் முன்பு, தனது குழந்தையுடன் ஒரு வீட்டில் தங்கியுள்ளார். தனி ஆளாக குழந்தையை வளர்த்த அவர், ஒரு நாள் ரெயில் தாமதமாக வந்தபோது தான் ஹாரி பாட்டர் புத்தகம் எழுத திட்டமிட்டார். அதற்கு பிறகு ஹாரி பாட்டர் புத்தகம் படைத்த சாதனைகளும், அதன் மூலம் ரவ்லிங், செல்வந்தராக மாறிய கதையும் வரலாறாக மாறிவிட்டது.

ஜே.ஜி.

பிரபல பாடகி பியான்ஸே நோலஸின் கணவரும் பாடகருமான ஜே.ஜி.க்கு, ஒரு காலத்தில் பிரெட் துண்டை பார்ப்பது கூட பெரிய விஷயமாக இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு சிறுவயதில் வறுமை, அடி உதை என கஷ்டப்பட்டவர் அவர். இருப்பினும் ஹாலிவுட் அவரது பாடல்களை கோடிக்கணக்கில் விற்றுக் கொடுத்தது. இன்று உலக பணக்காரர்களில் அவரும் ஒருவர்.

இவர்கள் மட்டுமின்றி, இன்னும் நிறைய பிரபலங்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்தவர்கள் தான். இருப்பினும் காலம் அவர்களை பெரும் பணக்காரர்களாக மாற்றியிருக்கிறது. அதற்கு வறுமையிலும் அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட திறமை தான் காரணம். 

மேலும் செய்திகள்