சிகரெட் பிடித்தவாறு தூங்கியதால் படுக்கையில் தீப்பிடித்து வாலிபர் சாவு

மாதவரத்தில் படுக்கையில் தனியாக சிகரெட் பிடித்தவாறு தூங்கிய வாலிபர், சிகரெட் தீ மெத்தையில் விழுந்து தீப்பிடித்ததில் ஏற்பட்ட புகையில் சிக்கி மூச்சு திணறி பலியானார்.

Update: 2017-12-01 23:54 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு திருமால்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(வயது38). இவரது மனைவி கவிதா(39). இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ராஜேஷ்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் அவர் குடிபழக்கத்திற்கு அடிமையானார். இதனால் இவரை விட்டு மனைவி பிரிந்து அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று மாலை 4 மணியளவில் ராஜேஷ்குமார் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர் படுக்கையில் சிகரெட் பிடித்தவாறு தூங்கியதாக தெரிகிறது. மேலும் அவர் குடிபோதையில இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் பிடித்திருந்த சிகரெட்டில் இருந்த நெருப்பு மெத்தையில் விழுந்துள்ளது. இவர் தூங்கிவிடவே மெத்தை தீப்பற்றி எரிந்தது. இதில் புகைமூட்டம் ஏற்பட்டதில் மூச்சு திணறி ராஜேஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்