பெங்களூரு சிறையில் முறைகேடுகள்: தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை

பெங்களூரு சிறையில் முறைகேடுகள் நடந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2017-12-01 23:38 GMT

பெங்களூரு,

பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை தலைமையகத்தில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி, போலீஸ் குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது குறித்தும் மந்திரி ராமலிங்கரெட்டியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அரசு அமைத்தது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி 2 ஆயிரம் பக்கங்களை கொண்ட அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் சிறையில் முறைகேடுகள் நடந்தது உண்மை தான் என்று வினய்குமார் குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையை நான் முழுவதுமாக படித்து பார்க்கவில்லை.

அதனால் அந்த அறிக்கையின் முழு விவரங்கள் பற்றி எனக்கு தெரியவில்லை. சிறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பது பற்றி மட்டும் தெரியும். அந்த அறிக்கையின்படி சிறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகளவில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதில் நாட்டிலேயே பெங்களூருவுக்கு 2–வது இடம் கிடைத்திருப்பதாக பற்றி நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். 2015–ம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு (2017) குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை பெங்களூருவில் குறைந்து உள்ளது. ரவுடிகளின் அட்டகாசம் ஒடுக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் வன்முறைகளோ, அசம்பாவிதங்களோ நடைபெறவில்லை.

பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக தான் 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வழக்குக்கும், குற்ற சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை. விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிப்பது போக்குவரத்து போலீசாரின் கடமையாகும்.

இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

மேலும் செய்திகள்